Skip to main content

Posts

Showing posts from October, 2018

சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - அவ்வை டி.கே. சண்முகம்

நாடகத் தமிழை வளர்த்த தந்தை அவர்; நாடகாசிரியர்கள் பலருக்குப் பேராசிரியர் அவர். சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையே அவரது பாடல்களையோ வசனங்களையோ உபயோகிக்காத நடிக நடிகையர் தமிழ் நாடக உலகில் இல்லையென்றே சொல்லிவிடலாம். நாடக உலகம் அப்பெரியாரைத் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றியது. எளிமையும் இனிமையும் ததும்பும் பாடல்களாலும் தேன் சொட்டும் தீந்தமிழ் வசனங்களாலும் அப்பெருமகனார் இயற்றியருளிய நாடகங்கள்தாம் தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வம் என்று கூறினால் அது மிகையாகாது. முழுப்பெயரையும் சொல்ல வேண்டியதில்லை. சுவாமிகள் என்றாலே போதும். தமிழ் நாடக உலகில் அது சங்கரதாஸ் சுவாமிகள் ஒருவரைத்தான் குறிக்கும். சுவாமிகள் காலத்திலிருந்த மிகப்பெரிய புலவர்களும் நாடகாசிரியர்களுமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர், குடந்தை வீராசாமி வாத்தியார் முதலியோரெல்லாம் சுவாமிகளின் புலமைக்குத் தலை வணங்கிப் பாராட்டினர். ஆங்கில மோகத்தால் தாய்மொழியிற் பேசுவதுகூடக் கெளரவக் குறைவென்று கருதப்பட்ட காலத்தில் நாடக மேடையின் மூலம் தமிழை வளர்த்த பெரியார் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். இசையரங்குகளிலே தெலு

விமரிசனத்தின் எல்லைகள் | க. நா. சுப்ரமண்யம்

இலக்கிய விமரிசனத்தைப்பற்றிச் சில சில்லறைச் சந்தேகங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் ( எனக்கும் தான் ) விளக்கிக்கொள்வதற்காகவே நான் இந்தக் குறிப்புகளை எழுதுகிறேன் . ஒரு கலையின் ஆரம்பதசையில் சொல்லப்படுகிற விஷயங்கள் எல்லாமே முடிவானவையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் . என்னைப்பற்றிய வரையில் நான் இதுபற்றியெல்லாம் “ உரக்கச் சிந்திக்கிறேன் ” என்று சொல்லலாமே தவிர வேறு சொல்வதற்கில்லை . இன்னும் ஒரு விஷயமும் தெளிவாகவே சொல்லுகிறேன் . சிறுகதையோ , நாவலோ , கவிதையோ எழுதும்போது வாசகர்களைப்பற்றிய நினைவைப் படைப்பாளன் அறவே ஒழித்துவிட வேண்டும் என்கிற நினைப்புள்ளவன் நான் . ஆனால் இலக்கிய விமரிசனம் செய்யும்போது வாசகனுடைய நினைவும் கூடவே வரத்தான் செய்யும் . என் இலக்கிய அனுபவத்தைத்தான் நான் எடுத்துச் சொல்ல முயலுகிறேன் என்றாலும் வாசகனுக்காகச் சொல்லுகிறேன் என்றும் சேர்த்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது . என் இலக்கிய அனுபவத்தை எடுத்துச் சொல்லி , கூடியவரையில் ஒரு இலக்கிய சிருஷ்டி வரையில் அந்த அனுபவத்தை அலசியும் பார்க்க முயலுவது